Thursday 1 September 2011

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

சென்னை, செப். 1: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிள்ளையார்பட்டி, திருச்சி உச்சி பிள்ளையார் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி முழுவதும் உள்ள விநாயகர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணிக்கே கோயில்களில் நடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.
சென்னை முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலையோரத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1300 இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். 4 முதல் 10 அடி உயரம் கொண்ட சிலைகள் மட்டுமே வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை நகர் முழுவதும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் சனி மற்றும் ஞாயிறன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார், பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர் உள்ளிட்ட ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


No comments:

Post a Comment